அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நானும் தமிழும்.. (In Tamil)

ஒருவேளை ஹைவ் ப்ளாக்செயினில் பதிவாகும் முதல் தமிழ் பதிவு இதுவாக இருக்கலாம், இல்லாமல் கூட இருக்கலாம்! அதெப்படி இருந்தாலும் இந்த பதிவு எழுதப்படும் தருணம் வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கொரோனா எனும் நோய்க்கிருமி ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு இருபது ஆண்டுக்கு பின்னிழுத்து சென்று கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. தமிழர்களும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இதற்கிடையே இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூட தடை விதிக்கபட்டிருப்பதால் மக்கள் அனைவரும் வேறு வழியின்றி வீடுகளுக்குள்ளேயே நாட்களை ஒட்டிக்கொண்டு இருக்கின்றனர். இது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்விக்கு சரியான விடை இத்தருணம் வரையும் கிடையாது.

எனக்கு தெரிந்து இப்போது தான் முதல் முறையாக தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கூட்டம் சேராமல் கொண்டாட போகின்றனர். அனைவரும் அவரவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு புது விதமாக இந்நாளை வரவேற்க இருக்கின்றனர். இதுவும் ஒரு புது அனுபவம் தானே.

indianwoman3238761.png

Image by Daniel Joshua Paul from Pixabay

நானும் தமிழும்

என் தாய் மொழி தமிழ். ஆனால் ஒரே ஒரு வருடம் மட்டும் தான் பள்ளியில் தமிழ் பயின்றிருக்கிறேன். மற்ற பனிரெண்டு வருடங்களும் கற்றது மலையாளம்! கேரளாவில் நாங்கள் வசிக்கும் பகுதியில் தமிழ் வழி கல்வி கற்பிக்கும் அரசு பள்ளிகள் இருந்தாலும் கூட என் பெற்றோர் என்னை மலையாள பள்ளிக்கே அனுப்பி அழகு பார்த்தார்கள். என் பெற்றோரின் இந்த முடிவு மிக தெளிவானதும் சரியானதுமாக இன்று படுகிறது! ஏனென்றால் மலையாள மொழி உண்மையிலேயே சற்று கடினமாக உணர்வதாக அநேக நண்பர்கள் என்னிடம் கூறியிருக்கின்றார்கள். இன்று மலையாளம், தமிழ் என இரு மொழிகளும் நன்கு கையாள முடிவதை ஒரு பாக்கியமாக எண்ணுகிறேன்! என் பெற்றோருக்கு நன்றி!

உண்மையில் எனக்கு மூன்று வயது இருக்கும்போதே என் அம்மா எனக்கு தமிழ் எழுத்துக்களை கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு தான் மலையாளம் எனக்கு முறையாக கற்பிக்கப்பட்டது. தாயிடமிருந்து தாயமொழி கற்றுக்கொண்டதும் ஒரு சிறந்த நிகழ்வே! இப்போது என்னவென்றால், இந்த ஊரடங்கு காலத்தில் நிஜ வாழ்க்கையில் நான் பயன்படுத்தும் ஒரே மொழி தமிழாக இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் என் மனைவி @ranjitha வுக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ். அம்மொழியில் அவளுடன் உறையாடாவிட்டால் எனக்கு சோறு கிடையாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்! :)

தமிழ் நூல்களை படிக்கும் பழக்கம் எனக்கு சிறு வயதிலே உண்டு. நான் முதன் முதலாக படித்து அர்த்தம் புரிந்து கொண்ண்ட தமிழ் நூல் - "பரிசுத்த வேதாகமம்". ஆமாம், பைபிள் கதைகளை வாசித்து தான் புத்தகம் படிக்கும் ஆர்வத்தையே வளர்த்து கொண்டேன்! அதற்க்கு பிறகு அவ்வப்போது தென்படும் செய்தி தாள்கள், மாத இதழ்கள், நாவல்கள் போன்றவற்றை படித்ததாலும் முக்கியமாக 'ஆல் இந்தியா ரேடியோவை' தினமும் கேட்டதாலும் என் தமிழின் ஆழம் அதிகரித்துக்கொண்டே வந்தது. தமிழ் வாசிக்க, படிக்க மற்றும் பேச எனக்கு நன்கு தெரிந்தாலும் என் தமிழ் எழுதும் திறன் என்னவோ சற்று குறைவு தான். மிகவும் மெதுவாக மட்டுமே என்னால் தமிழ் எழுத்துக்களை எழுத முடியும்! மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மிக விரைவாக எழுதி விடுவேன், தமிழென்றால் திணறுவேன்!

கல்லூரி நாட்களில் தமிழ்நாட்டில் இருந்ததால் தமிழுடனான என் உறவு இன்னும் அதிகமானது. தமிழ் நண்பர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களின் பரிந்துரையின் படி நல்ல நல்ல நூல்களை வாசித்தேன். கல்லூரி நூலகத்திலிருந்து நிறைய தமிழ் நாவல்களை கொண்டுபோய் வாசிப்பேன்!

அப்படி வாசிக்கையில் எனக்கு மிகவும் பிடித்து போன எழுத்தாளர் கவிஞர் வைரமுத்து அவர்கள். அவர் கவிஞராக இருப்பினும் கதை, நாவல் என மற்று பல படைப்புகளையும் நிகழ்த்தியுள்ளார். முக்கியமாக அவர் எழுதிய 'கருவாச்சி காவியம்', 'கள்ளிக்காட்டு இதிகாசம்' போன்ற நாவல்கள் என் மனதை உலுக்கியவை என்றே கூற வேண்டும். எங்கள் ஊர் தேனி மாவட்டத்தின் வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ள இப்படைப்புகள் இப்பகுதி மக்களுடைய வாழ்க்கையின் உண்மையான ஆவணமாக திகழ்கிறது.

தமிழ் மிகவும் அழகான மொழி. எனக்கும் தமிழுக்குமான உறவு இன்னும் உறுதியாகும். இது தொப்புள் கோடி உறவு, அழிக்க முடியாது!

ஹைவ்/ஸ்டீமிட் தமிழ் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்/சவால்.

எனக்கு தெரிந்த வரை இந்த அரங்கத்தில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இன்று தமிழ் புத்தாண்டு. இன்று ஒரு நாள் மட்டும் உங்களுக்கும் தமிழுக்குமான உறவை ஒரு கட்டுரையாக ஏன் தமிழில் இங்கு பதிவேற்றம் செய்யக்கூடாது? உங்கள் முயற்சிக்கேற்ற டாலர் value உங்கள் பதிவில் இருக்காது என்பது எனக்கும் தெரியும். இருந்தாலும் இன்று ஒரே ஒரு நாள் மட்டும் பணத்திற்காக இல்லாமல் தாய்மொழிக்காக ஒரு கட்டுரை எழுதலாமே?

உங்களுக்கும் தமிழுக்குமான உறவு என்ன? என்ற தலைப்பில் ஒரு பதிவை தமிழில் எழுதுங்கள். இதை செய்ய தமிழ் புத்தாண்டை விட ஒரு சிறந்த நாள் உண்டா?

என் தமிழ் நண்பர்கள் @bala41288, @sayee, @erode, @sabari18 போன்றோருக்கு இந்த சவாலை விடுக்கிறேன்.

கம்ப்யூட்டரில் Chrome Browser இல் Google Inputs என்ற extension ஐ இன்ஸ்டால் செய்தால் ஆங்கிலம் Type செய்யும் அதே வேகத்தில் தமிழிலும் Type செய்யலாம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Logo
Center